Friday, October 2, 2009

சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு



சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு
பதினெட்டு பனுவல்கள் குறுநகரமான புதுவையில் பண்பாட்டு ஊடாட்டங்களைத் தன்னால் முடிந்த அளவில் செயல்படுத்த 'வல்லினம்' விரும்புகிறது. வல்லினம் இதழ் மூலம் தொடர்ந்த இப்பயணம், இப்போது வல்லினம் வெளியீடாகவும் செயல்படுகிறது. இந்த வெளியீட்டுப் பயணத்தில் புதிய புதிய துறைகளைத் தேடி வல்லினம் செயல்படுகிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவுகளை வல்லினம் மிகுதியாக வெளியிட்டுள்ளது. இம்மக்களைப் புரிந்து கொள்வதற்கான கோட்பாடு மற்றும் அரசியல் சார்ந்த நூல்களையும் வெளியிட்டுள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. வல்லினம் ஒடுக்கப்படும் அரசியலுக்கு எதிராகவே தனது செயல்பாடுகளைக் கூர்மைப்படுத்துகிறது. சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றும் நூற்றுக்கணக்கான கலைஞர்களால் நிதழ்த்தப்படுகிறது. சாதாரண கிராம மக்களுக்கான பிரதியாக சுவாமிகளின் நாடகங்கள் உயிரோட்டத்தோடு இருந்து வருகிறது. சுவமிகளின் நாடக அச்சுப் பிரதிகளி இப்போது சந்தையில் இல்லை. 1920களின் இறுதிக்காலம் முதல் சுவாமிகளின் பிரதிகள், சாதாரண தாளில் சிறுசிறு நூல்களாக 1970கள் வரை வெளியிடப்பட்டன. அவை பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டன. பிழைகள் மலிந்து இருந்தன. "திருவள்ளுவர் புத்தக நிலையம், மூர் மார்க்கட் வடக்குப் பகுதி, சென்னை-3" (1969) என்ற நிறுவனம் வெளியிட்ட சுவமிகளின் 'நல்லதங்காள்' நாடகப் பிரதியின் அட்டையில் சுவாமிகளின் படம் என்று யாரோ ஒரு "கோட்டு சூட்டுடன்" இருப்பவர் படத்தைப் போட்டுள்ளனர். இவ்விதம், சுவாமிகள் படத்தை அறியாமல், அவரது பிரதிகளை வெளியிடுவோர் தமிழ்ச்சூழலில் இருந்துள்ளனர். இவ்வகையான நிலைமைகளிலிருந்து சுவாமிகளின் ஆக்கங்களை வல்லினம் ஆவணப்படுத்தியிருக்கிறது. சுவாமிகள் புதுச்சேரியில்தான் நிலையாக உறங்குகிறார். புதுச்சேரி அரசும் அவருக்கு ஆண்டுதோரும் விழா எடுக்கிறது. சுவாமிகளிந் 141ஆம் ஆண்டு நிறைவில், அவருக்குச் செய்யும் எளிய நினைவுச் சின்னமாக இந்த நூலை சுமார் 1264 பக்கங்களில் வல்லினம் வெளியிட்டுள்ளது.  


இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 18 பனுவல்கள்:  
1. ஞான சௌந்தரி சரித்திரம் 
2. ஸதி ஆநுசூயா 
3. கர்வி பார்ஸ் 
4. பிரஹலாதன் சரித்திரம் 
5. சாரங்கதரன் 
6. அல்லி சரித்திரம் 
7. சீமந்தினி நாடகம் 
8. சுலோசனா ஸதி 
9. அபிமன்யு சுந்தரி 
10. அரிச்சந்திரா 
11. பவளக்கொடி சரித்திரம் 
12. நல்லதங்காள் 
13. வள்ளித்திருமணம் 
14. சத்தியவான் சவித்திரி 
15. கோவலன் சரித்திரம் 
16. லலிதங்கி நாடகம் 
17. லவகுச நாடகம் 
18. பாதுகாபட்டாபிஷேகம்  


நூல் பெயர் : சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு-பதினெட்டு பனுவல்கள்  
பக்கம் : 1264  
தொகுப்பு : பேரா. வீ. அரசு  
வெளியீடு : வல்லினம்  
எண். 9, செந்தமிழ் வீதி,
நைனார்மண்டபம்,  
புதுச்சேரி - 605 004  
கைப்பேசி - 9600879978  
விலை : ரூ.700/-  
- மகரந்தன்


Thursday, October 1, 2009

இசையின் அதிகார முகங்கள்




இசை என்பது ஒரு பூடகமான உலகம். கலைமகளின் 'கடாக்ஷம்' பெற்றவர்கள் மட்டுமே அதற்குள் பிரவேசிக்க முடியும். அது அனுபவிக்கத் தக்கது, இரசிக்கத் தக்கது மட்டுமே என்பது போன்ற இசை எனும் கலைத் துறையைச் சுற்றி அதை அணுகமுடியாத அதிகார வலை பின்னிக்கிடக்கிறது.

எல்லாவிதமான அறிவுத் துறைகளையும் போல இசை என்பதும் தொடர்ச்சியான பயிற்சியால் உருவாக்கப்படுவதுதான் என்பதும், தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாகவே இசை குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதில்லை. தமிழ்ச் சூழலிலும்கூட ஓவியம், சிற்பம் முதலிய இன்னபிற கலைகளைப் பற்றி நிகழ்த்தப்பட்ட அறிவுத்திற சொல்லாடல்கள் கூட இசையைப் பற்றி நிகழ்த்தப்படவில்லை. வெளிவந்த ஒன்றிரண்டு நூல்கள் கூட மேற்குலக இசையைப் பற்றிப் பேசுவதோடு நிறுத்திக்கொண்டன. இசை குறித்த ஆய்வுகள் வெகுவாக முன்னெடுக்கப்பட வேண்டியதை முன்னெப்பொழுதையும்விட, ஆதிக்க சக்திகள் ஒன்றிணைந்து இசையைத் தனக்கான வடிவமாக / வியாபாரப் பொருளாக மாற்றி வரும் இச்சூழலில் மிக மிக அவசியமாகின்றது.

இந்தச் சூழலில்தான் பேரா.இ.முத்தையவின் இணூல் இசையின் வழியாக செயல்படும் அதிகார நுண் விளைவுகளை அடையாளப்படுத்துகின்றது. தமிழின் தொல் பழம் பிரதிகளான சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியம் தொடங்கி நவீன குறுந்தகடு வரையான இசை குறித்த ஆவணங்களில் இருந்து, இசை என்பது எவ்வாறு ஒரு அடிநிலை சமூகப் பதிவாக இருந்து மேல் நிலைச் சமூகத்டவரால் கையகப்படுத்தப்படுகிறது என்பதை சமூக வயப்பட்ட பின்புலத்திலிருந்து விவரிக்கின்றது.

விளிம்புநிலை வரலாற்றெழுதியல் முறையியலைப் பின்பற்றி அடித்தள மக்களின் நேக்கு நிலையில் இசையின் அதிகாரக் கூறுகளை அடையாளப்படுத்தும் இந்நூல் இதுவரைப் பேசப்பட்ட இசை வரலாற்றிலிருந்து விலகி மாற்று வரலாற்றைக் கட்டமைக்கின்றது. இது காலங்காலமாகப் பொதுப்புத்தி சார்ந்து புரிந்து கொள்ளப்பட்ட இலக்கிய மற்றும் பண்பாட்டு மரபுகளை கேள்விக்குள்ளாக்குவதுடன் வெகுவாக விலகி இதற்கான ஒரு புதிய முறையியளையும் உருவாக்குகின்றது.

அனைத்து கலை/ அறிவுத்துறைகளையும் சமய நீக்கம் செய்யப்பட்டது போன்று இசையையும் சமய நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் இசைத் துறையில் திறமை என்பது சாதிய அடிப்படையிலேயே தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது என்றும் அதற்கு எதிரான கலக இசை ஒன்று அடித்தள மக்கள் நிலையில் இருந்து உருவாவதற்கான சாத்தியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதான எடுகோள்களையும் வற்புறுத்துகின்றன.

இசை குரித்த அரசியலைத் தீவிரப்படுத்தும் இந்நூல் தான் உருவாக்கிய மூலத்துறையான இசைத்துறையையும் தாண்டி இலக்கிய, வரலாற்று, பண்பாட்டு மற்றும் அரசியல் துறைகளில் அதிகதாக்கம் உருவாக்கும் வகையில் இது ஒரு கோட்பாட்டு நூலுக்கான தகுதியுடன் வெளிந்திருக்கிறது.

நூல் பெயர் : இசையின் அதிகார முகங்கள்

ஆசிரியர் : இ. முத்தையா

வெளியீடு : வல்லினம்
எண். 9, செந்தமிழ் வீதி,
நைனார்மண்டபம்,
புதுச்சேரி - 605 004
கைப்பேசி - 9600879978

- மகரந்தன்

Saturday, August 29, 2009

வல்லினம் இதழ் தொகுப்பு


வல்லினம் காலாண்டிதழ் தமிழ் அறிவுத் தளத்தில் ஒரு புதிய சொல்லாடல் களத்தை உருவாக்கியுள்ளதாகப் பலரும் சிலாகித்துப் பேசியுள்ளனர். காரணம் இதன் சொல்லாடல் களம் பெரிதும் சமூக அறிவியல் களமாக உருவாக்கப்பட்டதாகும். வல்லினத்தின் ஒவ்வோர் இதழிலும் இனவரைவியல் பதிவு, சிறப்புக் கட்டுரை, ஆய்வுக்கட்டுரை, விவாதக் கட்டுரை, விமர்சன உரை, பங்கேற்பு விவாதம், எதிர்வினை, கவிதை, நேர்காணல் போன்ற குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகள் இடம் பெற்றுள்ளன.

வல்லினத்தின் ஒவ்வோர் இதழும் எத்தகைய அறிவார்ந்த அடர்த்தியான சொல்லாடல் களத்தை கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த அறிஞர் பெருமக்கள் பலரும் பழைய இதழ்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பல்வேறு அலுவல் நிமித்தமாக அப்பணி தள்ளிகொண்டே வந்து இப்போது நிறைவேறியுள்ளது. 2002ஆம் ஆண்டு முதல் 2007 வரை வந்த 13 இதழ்கள் தொகுக்கப்பட்டுள்ளது. விலை ரூ.250/- மட்டுமே.

தொடர்புக்கு:

வல்லினம்
9, செந்தமிழ் வீதி,
நைனார்மண்டபம்,
புதுச்சேரி-605004
செல்: 919600879978