Thursday, October 1, 2009

இசையின் அதிகார முகங்கள்




இசை என்பது ஒரு பூடகமான உலகம். கலைமகளின் 'கடாக்ஷம்' பெற்றவர்கள் மட்டுமே அதற்குள் பிரவேசிக்க முடியும். அது அனுபவிக்கத் தக்கது, இரசிக்கத் தக்கது மட்டுமே என்பது போன்ற இசை எனும் கலைத் துறையைச் சுற்றி அதை அணுகமுடியாத அதிகார வலை பின்னிக்கிடக்கிறது.

எல்லாவிதமான அறிவுத் துறைகளையும் போல இசை என்பதும் தொடர்ச்சியான பயிற்சியால் உருவாக்கப்படுவதுதான் என்பதும், தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாகவே இசை குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதில்லை. தமிழ்ச் சூழலிலும்கூட ஓவியம், சிற்பம் முதலிய இன்னபிற கலைகளைப் பற்றி நிகழ்த்தப்பட்ட அறிவுத்திற சொல்லாடல்கள் கூட இசையைப் பற்றி நிகழ்த்தப்படவில்லை. வெளிவந்த ஒன்றிரண்டு நூல்கள் கூட மேற்குலக இசையைப் பற்றிப் பேசுவதோடு நிறுத்திக்கொண்டன. இசை குறித்த ஆய்வுகள் வெகுவாக முன்னெடுக்கப்பட வேண்டியதை முன்னெப்பொழுதையும்விட, ஆதிக்க சக்திகள் ஒன்றிணைந்து இசையைத் தனக்கான வடிவமாக / வியாபாரப் பொருளாக மாற்றி வரும் இச்சூழலில் மிக மிக அவசியமாகின்றது.

இந்தச் சூழலில்தான் பேரா.இ.முத்தையவின் இணூல் இசையின் வழியாக செயல்படும் அதிகார நுண் விளைவுகளை அடையாளப்படுத்துகின்றது. தமிழின் தொல் பழம் பிரதிகளான சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியம் தொடங்கி நவீன குறுந்தகடு வரையான இசை குறித்த ஆவணங்களில் இருந்து, இசை என்பது எவ்வாறு ஒரு அடிநிலை சமூகப் பதிவாக இருந்து மேல் நிலைச் சமூகத்டவரால் கையகப்படுத்தப்படுகிறது என்பதை சமூக வயப்பட்ட பின்புலத்திலிருந்து விவரிக்கின்றது.

விளிம்புநிலை வரலாற்றெழுதியல் முறையியலைப் பின்பற்றி அடித்தள மக்களின் நேக்கு நிலையில் இசையின் அதிகாரக் கூறுகளை அடையாளப்படுத்தும் இந்நூல் இதுவரைப் பேசப்பட்ட இசை வரலாற்றிலிருந்து விலகி மாற்று வரலாற்றைக் கட்டமைக்கின்றது. இது காலங்காலமாகப் பொதுப்புத்தி சார்ந்து புரிந்து கொள்ளப்பட்ட இலக்கிய மற்றும் பண்பாட்டு மரபுகளை கேள்விக்குள்ளாக்குவதுடன் வெகுவாக விலகி இதற்கான ஒரு புதிய முறையியளையும் உருவாக்குகின்றது.

அனைத்து கலை/ அறிவுத்துறைகளையும் சமய நீக்கம் செய்யப்பட்டது போன்று இசையையும் சமய நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் இசைத் துறையில் திறமை என்பது சாதிய அடிப்படையிலேயே தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது என்றும் அதற்கு எதிரான கலக இசை ஒன்று அடித்தள மக்கள் நிலையில் இருந்து உருவாவதற்கான சாத்தியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதான எடுகோள்களையும் வற்புறுத்துகின்றன.

இசை குரித்த அரசியலைத் தீவிரப்படுத்தும் இந்நூல் தான் உருவாக்கிய மூலத்துறையான இசைத்துறையையும் தாண்டி இலக்கிய, வரலாற்று, பண்பாட்டு மற்றும் அரசியல் துறைகளில் அதிகதாக்கம் உருவாக்கும் வகையில் இது ஒரு கோட்பாட்டு நூலுக்கான தகுதியுடன் வெளிந்திருக்கிறது.

நூல் பெயர் : இசையின் அதிகார முகங்கள்

ஆசிரியர் : இ. முத்தையா

வெளியீடு : வல்லினம்
எண். 9, செந்தமிழ் வீதி,
நைனார்மண்டபம்,
புதுச்சேரி - 605 004
கைப்பேசி - 9600879978

- மகரந்தன்

No comments: