Thursday, October 25, 2007

வல்லினம் இதழ் - 3

சாகிற மட்டுக்கும் தலித் ஆதரவாளனாகவே நிற்பேன்
- இன்குலாப்

சாமுல் ஹமீது என்ப் பெற்றோர்களால் பெயரிடப்பட்டு மக்கள் கவிஞர் என்று தமிழ் பேசும் தேசங்கள் எல்லாம் அறியப் படுபவர் - இன்குலாப்.

மாணாவாரிச் சீமையான இராமநாதபுரம் - கீழக்கரையில் பிறந்தவர். ஒடிக்கப்பட்ட சமூகச் சூழலில் வாழ்ந்த சித்த மருத்தவக் குடும்பம் இவருடையது. மரபுவழி மருத்துவம் போலவே மரபுவழி இசை ஞானம் மிக்கக் குடும்பமும்கூட. புதுக்கல்லூரியில் 35 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சமூகக் கொடுமைகளுக்கு எதிரான எழுத்துப்போரைத் தொடர்ந்து செய்து வருபவர். "ஆளூம் வர்க்கங்கள் நடுநடுங்க ஆயுதப் புரட்சி செய்வோம்" என்பது இன்குலாப் கவிதை வரிகளில் ஒன்று. ஆறு கட்டுரைத் தொகுப்புகள், ஆறு கவிதை தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியராகவும் இவர் பரிணமித்துள்ளார்.

திராவிட இயக்கச் சிந்தனையாளராக, மார்க்சிய ஈடுபாடுடைய இடதுசாரிச் சிந்தனையாளராக, தேசிய இன விடுதலைப் போராட்ட ஆதரவாளராக, ஒடுக்கப்பட்ட தலித்துகளுக்குக் குரல் கொடுப்பவராக பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் இன்குலாப் அவர்கள் வல்லினத்திற்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி . . .


தி.மு.க. அனுதாபியாக இருந்த நீங்கள் 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு "ஆளும் வர்க்கங்கள் நடு நடுங்க ஆயுதப் புரட்சி செய்வோம்" என்று எழுதுகிற அளவிற்கு தி.மு.க.வில் இருந்து விலகி, இடதுசாரி இயக்கங்களுக்குச் செல்ல வேண்டிய காரணம், பின்னணி என்ன?

1968 டிசம்பரில் நடந்த 'வெண்மணி படுகொலை' என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதில் ஒன்று. அது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அது பெரியார் சொன்ன கோட்பாட்டுக்கு எதிரான கேள்விகள் கிடையாது. பெரியார் சொன்னதை அண்ணா சொன்னார் என்று நம்பினேன்; அவ்வளவுதான். திராவிடக் கட்சிகளில் ஆட்சிக்கு வந்த கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டது என்று நான் நினைத்தேன். அவர்களின் போரட்டத்தை, நியாயத்தை அது முழுமையாகப் பார்க்கவில்லை என்று நினைத்தேன். அனைத்திற்கும் மேலாக, ஆட்சியா அல்லது ஒடுக்கப்பட்டோரின் விடுதலையா என்று பார்க்கும் போது, ஆட்சியதிகாரத்திற்குதான் அந்தக் கட்சிகள் முதன்மைக் கொடுத்ததே தவிர ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக இல்லை என்பதைத்தான் அந்த நிகழ்ச்சி எனக்குத் தெளிவுபடுத்தியது. . . . . . . . . . .


நக்சல்பாரி இயக்கங்கள் நீர்த்துபோனதால் தமிழ்த் தேசியத்தின்பால் ஈடுபாடு உண்டாகி இருக்கிறாது என்று எடுத்துக்கொள்ளலாமா?

நக்சல்பாரி இயக்கங்கள் நீர்த்துப் போனதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால், நக்சல்பாரி இயக்கம் தீவிரம் கொண்ட காலகட்டத்தில் நான் அதில் இருந்திருக்கிறேன். அப்போதும் தமிழ் தேசியத்தின் விடுதலை என்பதற்கு மாறான கொள்கையை நான் வைத்திருந்ததில்லை. நான் சார்ந்திருந்த லிபரேஷன், எம்.எல். இயக்கம் இன்றைக்கும் சில இடங்களில் வலுவாகத்தான் இருக்கிறது. அது ஒரு கட்டத்தில் காஷ்மீர் விடுதலைப் பற்றிச் சொல்லும் போது "அது இந்தியாவிற்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும்" என்கிற நிலைபாட்டை எடுத்தது. நான் அதை எதிர்த்தேன். ஏனென்றால், காஷ்மீர் பற்றி முடிவு செய்ய வேண்டியது எம்.எல்.பார்ட்டியல்ல. காஷ்மீர் பற்றி முடிவு செய்ய வேண்டியது இந்திய அரசாங்கமும் அல்ல, பாகிஸ்தான் அரசாங்கமும் அல்ல. காஷ்மீர் பற்றி காஷ்மீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களிடம் போய் தங்களுடைய முடிவைத் திணிப்பது என்பது எந்த வகையில் சரி? இதுதாந் என்னுடைய கேள்வி . . . . . . . . . . . . . . .

(மேலும் வாசிக்க காண்க வல்லினம்-3, நவம்பர்-ஜனவரி 2003)

- - - - - - - oo0oo - - - - - -

நான் இந்து இல்லை
- பிரபஞ்சன்

எனக்கு இந்து மதம் பற்றி தெளிவான புரிதலும் அறிவும் உண்டு. வேத உபநிஷதம் முதலாக அம்மதத்தின் ஆதார தூண்கள் அனைத்தையும் நான் அறிவேன். ஜெயேந்திர சரஸ்வதி, ராம கோபாலன் போன்ற இந்து மதப் புணருத்தாரணர்களைவிடவும், எனக்கு அதிகமான இந்து மத அறிவு உண்டு. இந்து மதம், விசித்திரமான மதம். பல சிந்தனைப் போக்குகளை ஒன்றிணைக்க முயன்று, அதனாலேயே பல முரண்களை, தனக்குள்ளேயே கொண்ட அபத்தமான மதம் அது. அத்தோடு, பௌத்தர், சமணர், சார்வாகர் போன்ற இந்து மதத்துக்கு வெளியே நின்ற ஏன், பௌதிகவாதிகள் உட்பட பல சிந்தனையாளர்களின் தத்துவக் கூறுகளைத் தமக்குள் இணைத்துக் கொண்ட வேடிக்கை மதம் அது. எல்லாவற்றுக்கும் மேலாக, தன் மத வரம்புக்குள் வந்து திரண்ட மக்கள் திரளையும்கூடச் சம்மம் என்று ஒப்புக்கொள்ளாத மனித விரோத மதம் அது. மக்களை வருணங்களாகப் பிரித்து, மானுட மேன்மைக்கேக் குந்தகம் விளைவித்த மதம் அது. இந்த மதத்தை விட்டு, சொரணையும் அறிவுத் தெளிவும் கூடிய மக்கள் வெளியேறும்போது, அதை ஏதோ ஒருவகையில் தடை செய்வது என்ன மனித அறம்?
(மேலும் வாசிக்க காண்க வல்லினம்-3, நவம்பர்-ஜனவரி 2003)

- - - - - - - oo0oo - - - - - -

வாக்குமூலம்
- பாஞ்சாலி அம்மள்

அஞ்சாவதா பையன் பிறந்தா. . . சொத்து பஞ்சா பறந்திடும் . . . அவனைக் கடலிலே தூக்கிப் போடு . . . அப்படின்னாரு அவனோட அப்பா. எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

இன்னைக்கு அவன் இந்த ஜனங்களுக்கு சொத்தாயிட்டான். அதை நெனைக்கற்ப்போ. . . நான் வேண்டிய தெய்வமெல்லாம் என்னோடு இருக்கிறாதுதான் நெசம். . .

பாசம் பொங்க சொல்லி ஆனந்தப்பட்டார் 89 வயது நிரம்பிய அந்த தாய் பாஞ்சாலியம்மாள்.

இவரைச் சந்திக்க புதுவையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திலாசுப்பேட்டையை அடைந்தோம்.

சின்னஞ்சிறிய சந்து . . . அதனுள் சில அடி தூரம் நடந்ததும். அவர் வீடு வந்துவிடுகிறது. முன்புறம் திண்ணை கொண்ட மாடி வீடு. படி ஏறி உள்ளே நுழைந்தால் பரந்த பெரிய ஹால். அதில் நான்கைந்து மூங்கில் சேர். . . ஒரு பெஞ்ச். . . அதன் மேல் ஒரு டெலிபோன். ஒரு ஓரத்தில் பிளாக் அன்ட் ஒயிட் போர்ட்டபிள் டிவி.

ஹாலையட்டி 2 அறைகள் மர்றும் சமையல் கட்டு. ஒரு இடத்தில் தண்ணீர் குடம், சில சில்வர் பாத்திரங்கள்.

முன் அறையில் இருந்து மாடிக்குப் படி செல்கிறது. மாடிதான் ரங்கசாமியின் படுக்கை அறை. அங்கு ஒரு மடக்கு பிளாஸ்டிக் கட்டில் (அதில் பெட்ஷீட்கூட கிடையாது) அதன்மேல் நான்கைந்து செட் கதர் வேட்டி-சட்டை. அவரைப் போலவே அவரது வீடும் எளிமையாகக் காட்சி அளிக்கிறது. பிரம்மச்சாரியான ரங்கசாமி தனது தாயாருடன் சில வருடமாக இந்த வீட்டில்தான் வசித்து வருகிறார். வீட்டில் நுழைந்து இவரது படுக்கை அறைவரை யார் வேண்டுமானாலும் போகலாம். எந்தத் தடையும் இல்லை.

கண்ணில் பட்டது கொல்லைப்புறத் தோட்டம். அங்குதான் உட்கார்ந்திருந்தார் பாஞ்சாலியம்மாள்.

எங்களை அரிமுகப்படுத்தியதும், "பேப்பர்காரங்காளா . . . நான் என்ன சொல்லறது.. . . மந்திரிக்கு தெரிஞ்சா ஏதாவது சொல்வார்"

உடல் கூன் விழுந்த நிலையில் மெல்ல மெல்ல ஹாலுக்குள் வந்து பிரம்பு நாற்காளியில் அமர்ந்தார். மகனால் கிடைத்த மரியாதை அவரை நிமிர வைத்தது. தனது நினைவில் நின்றதை எங்களிடம் பகிர்ந்தார்.

"எனக்கு அஞ்சு புள்ளைங்க. . . மூத்தவன் ஆதிகேசவன், வாத்தியாரு. அடுத்து தலிஞ்சம்மா, அலமேலு, மனோன்மணின்னு மூணு பொண்ணுங்க. ஐந்தாவதுதான் மந்திரி பிறந்தான்.

ஐந்தாவது ஆண் குழந்தை பிறந்தா சொத்து பஞ்சாப் பறந்திடும்னு அப்ப சொல்வாங்க. அதனால என் வீட்டுக்காரர் குழந்தை முகத்தைக் கூட பார்க்காம அவனை கடல்ல போட்டுட்டு வந்திடுன்னுட்டார். அப்போ என் மனசு கிடந்து துடிச்சது. அதுக்கெல்லாம் சேர்த்து இப்ப அவன் பெரிய ஆளா ஆயிட்டான். அத நினைக்கிறப்போ பெருமையா இருக்கு.

சின்ன வயசுல இருந்தே படிப்பிலே கவனமா இருப்பான். அக்கம் பக்கம் போய் நிக்கனும்னு நினைக்க மாட்டான். கோலிகுண்டு கூட விளையாடத் தெரியாது. படிக்கிற காலத்துல அவனுக்கு படிப்பத் தவிர எதுவும் தெரியாது.

வக்கீலுக்கு படிச்சிட்டு ஒரே ஒரு கேசுக்குத்தான் போனான். பொய் பேசுற வேலை வேண்டான்னு சொல்லிட்டு அத விட்டுட்டான்.

ரெட்டியார்பாளையத்துல கொஞ்சம் நிலக் கிடக்குது. பன மரங்கள கள்ளு மரத்துக்கு விட்டு அந்த வருமானத்துல தான் படிக்க வச்சோம். அந்தப் பணத்தைக்கூட எங்க வீட்டுக்காரரு போயி வாங்க மாட்டாரு. இவர் கள்ளு குடிக்க போயிட்டார்னு யாராவது சொல்லிடுவாங்கன்னு பேஅம். அந்த பணத்தைக் கூட கடைக்காரங்க வீட்டுல வந்துதான் கொடுப்பாங்க.

எம் புள்ள மந்திரியும் அவங்க அப்பா மாதிரி. எந்த கெட்ட பழக்கங்களும் இல்ல. படிச்சு முடிச்சுட்டு பெருமாளுடன் அரசியலில் இருந்தான். அப்புறம், அவரை விட்டு பிரிஞ்சு தனியா தேர்தல்லே நின்னான்.

முதல் தடவை ஜெயிச்சதுமே மந்திரி ஆயிட்டான். அவன் ஜெயிச்ச பிறகுதான்பா இந்தத் தொகுதியே நல்லா இருக்கு. அதுவரைக்கும் மழை பொஞ்சா முழங்கால் வரைக்கும் தண்ணி நிற்கும்.

அவந் கல்யாணம் செய்துக்காம இருந்ததுதான் என்னை வேதனைப் படுத்தியது. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். பெரியவங்களை வச்சி சொன்னேன். பிரயோஜனப் படலை. சரின்னு விட்டுவிட்டேன். போகப்போக மனசு சரியாயிட்டு.

இப்போ முதல் மந்திரியா பதவி ஏற்கிறத பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அதுக்கு கொடுப்பினை இல்லாம போயிட்டு. என் நேரம் அன்னைக்கு பார்த்து வழுக்கி விழுந்து காலில் அடிபட்டு விட்டது. அதனால வரமுடியாம போயிட்டு. எல்லா ஜெனமும் பார்த்தது. என்னால பார்க்க முடியல. இப்போகூட அதத்தான் சொல்லிட்டு இருந்தேன். ராத்திரி தூங்கப்போகும்போது கூட இந்த நெனப்புதான். வயசாயிடுச்சு, இனிமே அந்த வாய்ப்பு கிடைக்குமா. . . . ?

(பாஞ்சாலியம்மாள், புதுவை முதல்வர் திரு.ந. ரங்கசாமி அவர்களின் தாயார்)

- - - - - - - oo0oo - - - - - -

வல்லினம் மூன்றாவது இதழில் . . . . .

கட்டுரை:
தமிழ்ச் சினிமாவும் அதன் பார்வையாளர்களும் - அ. ராமசாமி
பாடநூல் அரசியல் - முனைவர் த. பரசுராமன்
உலகமயமும் தொலைக்காட்சியும் : கலாச்சாரத் தூய்மை வாதத்தின் போதாமை - அ.மார்க்ஸ்
ஊருக்குத் திரும்புதல் - சு. வில்வரத்தினம்

பதிவு :
இருளும் வாழ்க்கை

கவிதை :
ப. சிவக்குமார், மு. முருகேஷ், மு. சத்யா, பாரி, அன்பாதவன்

சிறுகதை:
மயில்வேலன்

Sunday, October 21, 2007

வல்லினம் இதழ் - 2

சாதி ரீதியான பிரதிநிதிதுவம் பத்திரிகைகளில் வேண்டும்

- த. பழமலய்.

"சனங்களின் கதை" கவிதைத் தொகுதி மூலம் தமிழ்க்கவிதைக்கு அறிமுகமானவர் கவிஞர் த.பழமலய். "குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்", "இவர்கள் வாழ்ந்தது", இதுவரை எட்டுத்தொகுதிகளைக் கொண்டுவந்துள்ளார். சாதிகளின் போராட்ட வரலாற்றைத் தமிழ்ப் பாட்டாளிகளின் உணர்வைப் பேச்சுத் தமிழில் கவிதையாகப் படைத்தவர்.

தமிழகத்தில் இனவரைவியல் இலக்கியத்தின் முன்னோடிகளின் ஒருவராகக் கருதப்படும் த. பழமலய், இலக்கியத்திலும், சாகித்ய அகாடமி வழங்கும் விருதுகளிலும் சாதிரீதியான இட ஒதுக்கீடு வேண்டும் என்று அவ்வப்போது குரலெழுப்பி வருகிறார். அவருடனான இந்த நேர்காணல் அவரது எழுத்துக்களைப் பல்வேறு பின்புலங்களில் விளங்கிக்கொள்ள உதவும். இனி வல்லினத்திற்காக அவர் அளித்த நேர்காணலில் இருந்து. . . .


தலித்துகளுக்காகப் பெரியார் ஒன்றுமே செய்யவில்லை என்பதாக ரவிக்குமார் பேசி வருகிறார். தலித்துகளுக்காக மற்றவர்கள் பணிபுரிந்ததை மறுப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்?

. . . அவங்களுக்குத் தங்களுடைய ஆட்களை ஒருங்கினக்கிணைக்கனும். "ஒரே தலைவர்தான் தங்களுக்கு உண்டு" அப்படின்னு சொல்லனும். இப்போ உண்டாகியிருக்கிற மத்த சாதித் தலைவர்களை நமக்குத் தலைமதாங்க விடாதே; பிரியாதே; நாம் எல்லோரும் ஒரே அணியில் நிக்கனும். அதுக்கு வேண்டியது, தலைவரை ஒருத்தராக்கனும். நமக்கு வேண்டிய சிந்தனையாளரை ஒருத்தராக்கனும். அது பெரியாராகவும் இருக்கக்கூடாது. பெரியாரா இருந்தா இங்க நாலுபேர் பிரிஞ்சுடுவான். அப்போ, அம்பேத்கரை உயர்த்தி, பெரியாரைக் கீழிரக்கினாத்தான் எதிர்பார்த்த வேலை நடக்கும். சமகாலத்தில் ஓர் அரசியல் கட்டுமானத்தை உருவாக்க இதுபோன்ற உக்திகள் தேவை. இதெல்லாம் எவ்வளவு தூரம் வெற்றி பெரும் என்பது வேறு விஷயம். பின்னே இதெல்லாம் எதுக்கு? அப்போவாவது நம்ம ஜனங்களுக்கு விழிப்புணர்வு வருதான்னு பாப்பமே. "தண்ணீர ஊத்தி எழுப்ப முடியல. வெந்நீரை ஊத்தியாவது எழுப்ப முடியுமா"ன்னு பாக்கலாமே. அப்படித்தான் ரவிக்குமார் நெனக்கிறார்னு நான் நெனக்கிறேன்.
அம்பேத்கரைத் தலித்துகளுக்காக மட்டுமே பேசுபவராகக் குறுக்குவதென்பது அம்பேத்கருக்கும் பெருமையில்லை; தலித்துகளுக்கும் பெருமையில்லை.

இது, தலித் அல்லாத தலித் ஆதரவாளர்களை ஓரம்கட்டும் அரசியல்தானே?

தலித் ஆதரவாளர்கள் என்றால் யார்? தலித்துகளுக்காக ஒரு கட்டத்தில் அவங்க பிரச்சினைகளுக்காக வக்கீலா நின்னு வக்காலத்து வாங்கிப் பேசியவர்கள்தானே? இப்போது, தலித்துகள் அவங்க பிரச்சனையை அவங்களாகவே பேசிக்கொள்வார்கள் என்றால் சந்தோஷம். ஆனா, அந்த நிலைக்கு அவங்க வந்துட்டாங்களா என்பது அவங்களே தீர்மானிச்சிக்க வேண்டிய விஷயம்.

சாதிய அரசியல் தாக்கம் மிகுந்திருக்கும் இன்றைய சூழலில் தமிழ் இலக்கியத்தின் போக்கு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

சாதிய அரசியல் தாக்கம் மிகுந்திருக்கும் இன்றைய சூழலில், சாதிய இலக்கியங்களின் (தலித், விளிம்புநிலை) எழுச்சி தவிர்க்க முடியாதது. சாதிய விழிப்புணர்வை உண்டாக்கி, சாதிகளுக்கிடையிலான சமத்துவத்தையும் நிறுவி, நிலைநாட்டுவதாக தமிழ் இலக்கியத்தின் போக்கு இருக்கும். இதை இன்னொரு வகையில் சொல்வதானால் அனைத்துச் சாதிகளின் இருப்பை அங்கரிப்பதாகவும் சமூக நீதியை வழங்குவதாகவும் இருக்கும். இது நம் இலக்கியக்காரர்கள் மறந்துவிட்ட, ஆனால் மறக்கக்கூடாத நமது ஐந்திணை மரபே ஆகும். (மேலும் படிக்க. . . காண்க வல்லினம் இதழ் 2; ஆகஸ்ட் - அக்டோபர் 2002)

*********0*********


பெரியார் சிந்தனையாளர் இல்லையென்றால் பின் யார்தான் சிந்தனையாளர்?

- அ. மார்க்ஸ்

பெரியாரைச் சிந்தனையாளர் இல்லை என்கிறார் ரவிக்குமார். பின் யார்தான் சிந்தனையாளர். Academicஆக, விஞ்ஞனப் பூர்வமான ஆநவாடினடிடடிபலயைப் பயன்படுத்தி ஆய்வு செய்பவர்கள்தான் சிந்தனையாளர்களா? எழுதுகிறவர்கள்தான் சிந்தனையாளர்களா, பேசுகிறவர்கள் சிந்தனை யாளர்கள் இல்லையா? விஞ்ஞானப்பூர்வமான ஆநவாடினடிடடிபல என்பதெல்லாம் அதிகாரம் கலக்காத தூய ஊடகமா? சாக்ரடீஸ் எதையும் எழுதிவைக்கவில்லை என்பதால் அவர் சிந்தனையாளரில்லையா? சிந்தனையாளர்கள் பற்றி கிராம்ஷி சொன்ன ஒரு கருத்தாக்கம் முக்கியமானது. அறிவு ஜீவிகள் பற்றி அவர் சொல்ல வரும்போது, பாரம்பரிய அறிவு ஜீவுகள் (Traditional Intelectual) உயிர்ப்புமிகு அறிவுஜீவிகள் (Organic Intetectual) என்றும் பிரிப்பார். பாரம்பரிய அறிவுஜீவிகள் இருக்கிற நிலைக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள். உயிர்ப்புமிகு அறிவுஜீவிகள் என்பவன் "ஸ்டேடஸ்கோ"விற்கு எதிராக இருப்பவன். இந்த உயிர்ப்புமிகு அறிவுஜீவிகளிடம்கூட ஏதும் பலவீனங்கள் இருந்தால் பின்னாளில் அவனையும் உள்வாங்கும். ஆனால் பெரியார் என்றென்றைக்கும் "ஸ்டேடஸ்கோ"விற்கு எதிராக நின்ற எதிர்க் கலாச்சாரவாதி, மாற்றுச் சிந்தனையாளர். அதனால்தான் நாம் இன்றைக்கு துணிச்சலோடு சொல்லமுடியும், "இந்துத்துவமும், பி.ஜே.பி.யும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் கையில் எடுக்க முடியாத ஒரு நெருப்புத் துண்டமாக விளங்கக் கூடியவர் பெரியார் ஒருவர்தான்.

(மேலும் படிக்க. . . காண்க வல்லினம் இதழ் 2; ஆகஸ்ட் - அக்டோபர் 2002)


வல்லினம் இரண்டாம் இதழில் . . . .


கட்டுரைகள்:

1. தலித் தொன்மங்களுக்கு அப்பால் - பக்தவத்சல பாரதி
2. தமிழ் சினிமாவும் அதன் பார்வையாளர்களும்-1 - அ. ராமசாமி
3. பேசுவது போல எழுதுவது என்பது - கே. பழனிவேலு

கவிதை:

வெண்ணிலா, அய்யப்ப பணிக்கர், உடுக்கை, ஆ. அமிர்தராஜ்

சிறுகதை:

கிணறு - மனோஜ் தாஸ், தமிழில்: ராஜ்ஜா , கரசேவை - ப்ரதிபா ஜெயச்சந்திரன்

வல்லினம் இதழ் - 1

கேப்மாரிகள் - இரு பதிவுகள்

பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியாவெங்கும் பல்வேறு சமூகப் பிரிவினர் குற்றப் பரம்பரையினராக முத்திரைக்குத்தப்பட்டிருந்தனர். தீவிரக் கண்காணிப்பும் கட்டுப்பாடும் கடுமையான அடக்குமுறையும் இம்மக்கள்மீது செலுத்தப்பட்டன. சில பகுதிகளில் ஆதிக்க உயர்சாதியினரால் திருட்டு போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பல பழங்குடியின சாதிகளும் அடங்கும். தமிழகத்திலும்கூட பல இடைநிலைச் சாதிகள் குற்றப் பரம்பரையினராக நடத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. வடமாவட்டங்களில் இதனை எதிர்த்துப் போராட் டங்களும் அவற்றின் அடிப்படையில் அரசியல் மாற்றங்களும்கூட நிகழ்ந்துள்ளன.

இன்றைக்கும் குற்றப்பழி சுமக்கும் பிரிவினராக உள்ளவர்கள்தான் இந்தக் கேப்மாரிகள். புதுச்சேரி அருகேயுள்ள கூனிச்சம்பட்டு என்ற கிராமத்தில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரில் வசிக்கும் மக்கள் வெளியூர்களுக்குச் சென்றால் தங்கள் ஊரின் பெயரைச் சொல்ல மாட்டார்களாம். கூனிச்சம்பட்டு என்று சொன்னாலே கேப்மாரிகள் என்று கருதி கைது செய்துவிடுவர்களாம். இப்படி சொல்லமுடியாத வேதனையுடன் வாழ்ந்துவரும் இம்மக்கள் பற்றிய பதிவு இது.

பதிவு - 1

கேப்மாரிங்கிறது திருடங்களோட சாதி. திருட்டு அவங்களோட முக்கியமான தொழில். இந்த சாதி பொம்பளைங்க பெரிய ஊருங்களுக்கு. . .தில்லி, பம்பாய், சென்னை, மாயவரம், கும்பகோணம் போவாங்க. உள்ளூர்ல திருடமாட்டாங்க. ஆம்பளைங்க பேங்க்ல திருடுவாங்க. அவங்க பல பாஷ பேசுவாங்க. அப்புறம். . . செயின், நெக்லஸ், வளையல்னு போட்டுகிட்டு போவாங்க. ஆனா, பணக்காரங்க மாதிரி இருக்கமாட்டாங்க.

காரணியோட நடுவுல இருந்து கொஞ்சம் தள்ளி கேப்மாரிகளுக்கு ஒரு தெரு இருக்கு. அவங்களுக்கு என்று சொந்தமாக நெலமெல்லாம் இருக்கு. நாங்கள் அவங்க நெலத்துல வேலை பாத்திருக்கோம். அந்தச் சாதிப் பொம்பளைங்க மாட்டுக்கறில்லாம் சாப்பிடமாட்டாங்க. திருடப்போறதுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவங்க குலதெய்வம் காக்கப்பட்டனுக்கு பூசை போடுவாங்க. ஆத்துக்குப் பக்கத்துல இருக்குற காக்கப்பட்டன் கோயில் ரொம்ப அமைதியா இருக்கும். வேற இந்த சத்தத்தையும் கேட்க முடியாது. காக்கப்பட்டன் சாமியே பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்கும். இந்தக் கோயில்ல வூட்டுக்காரு, கொழந்தைங்களோட மூணு பகல் பொழுது, மூணு ராப்பொழுதும் தங்கியிருப்பாங்க. திருடப் போறதுக்கு முன்னாடி காக்கப்பட்டனின் உத்தரவுக்காகக் காத்திருக்கிற அந்த நேரத்துல ஒரு நாளைக்கு மூணுமொற அந்த ஆத்துலயே குளிப்பாங்க. காக்கப்பட்டன் உத்தரவு கிடைச்சப்பிறகு திருடப்போவாங்க. காக்கப்பட்டன் உத்தரவுக்காக ஒரு மாசம்கூட காத்திருப்பாங்க.

அவங்க பெரும்பாலும் பெரிய கோயில்ல நடக்கிற திருவிழாவுக்குப் போவாங்க. யாரும் அவங்கள சந்தேகப்படமாட்டாங்க. அதுக்கு அவங்க போட்டிருக்கிற நகைங்கதான் காரணம். அவங்க வச்சிருக்கிற ஒரு மருந்தால, கூட்டத்துல இருக்குறவங்க கழுத்து, கையில எல்லாம் பீச்சி அடிப்பாங்க. உடனே, செயின், வளையல்களெல்லாம் கத்திரிச்சு எடுத்துக்குவாங்க. யாரும் இதக்கண்டிபிடிக்க முடியாது. கண்ணமூடி தெறக்கறதுக்குள்ள செஞ்சிடுவாங்க. அவங்களுக்கு அவங்களோட தொழில்பத்தின நுணுக்கம் தெரியும். நகைங்களை திருடன ஒடனே அங்கிருந்து போயிடமாட்டங்க. யார்கிட்டே திருடப்போறாங்களோ, அவங்களச் சுத்தி இவங்களோட ஆளுங்க சுத்திகிட்டே இருப்பாங்க. சின்ன சந்துல நிக்கிற அவங்களோட ஒரு ஆள்கிட்ட இந்த நகைங்கலெல்லாம் போய் சேர்ந்திடும். பதினைஞ்சு-இருபதாயிரம் மதிப்புக்கு ரூபாவோ அல்லது நகைங்களோ போதுமானது கெடச்சதும் கிராமத்துக்கு வந்துடிவாங்க.

பொம்பளைங்க இதுக்கெல்லாம் பயப்படமாட்டாங்க. அவங்க எல்லாத்துக்கும் தயாரா இருப்பாங்க. அவங்களைக் கைது பண்றதுக்கு பலவாட்டி போலீஸ் வந்திருக்கு. நாங்க சேரிப் பொம்பளைங்க. அவங்க ஜெயில்ல இருந்து வர்றதப் பாக்க ரோட்டுக்கு போயிருக்கோம். அவங்களுக்காக நாங்க செல நேரம் வருத்தப்படுவேம். பாவம், அந்த பொம்பளைங்கள கைது பண்ணிக்கினு போகும்போது நாங்க அழுதிருக்கோம். அவமானம்தான் அது. "வெல்லக்கட்டி மாதிரி அழகா இருக்கீங்க, ஏன் இந்தத் தொழிலுக்கெல்லாம் போறீங்கன்னு" நாங்க கோட்டோம். ஆனா, கொஞ்சம்கூட வெட்கமோ, அவமானமோ, உணர்ச்சியோ இல்லாம, அந்த வண்டியில சௌகரியமா, ஒட்காந்துகினு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனாங்க. . . . . . . . . . . . . (மேலும் வாசிக்க காண்க வல்லினம், மே-ஜூன் 2002, இதழ்-1)

(Viramma : Life of an Untouchable, Viramma, Josiane RAchine, Jean Luc Racine, Verso, London-1997; from English to Tamil- Maharandan)


வல்லினம் இதழ் ஒன்றில். . . .

நேர்காணல்:

1. "பெரியாரைச் சிந்தனையாளார் என்று சொல்ல முடியாது"
- ரவிக்குமார்


கட்டுரை:

1. தினமும் நடக்கும் தற்கொலைகள்
- பிரபஞ்சன்
2. கடந்த நூற்றாண்டில் ஈழத்தில் தமிழ்த் தேசிய இலக்கியம்
- சு. வில்வரத்தினம்
3. திரைப்படத் தமிழ் - முனைவர் த. பரசுராமன்
4. 'நேற்றை' வளைத்துப் பிடிக்கும் நிகழ்காலங்கள் - க. பஞ்சாங்கம்

கவிதை :

மு. பொன்னம்பலம், தய்.கந்தசாமி, புதுவை இளவேனில்,
மகரந்தன், சடகோபன்.


சிறுகதை :

பாமா