சாகிற மட்டுக்கும் தலித் ஆதரவாளனாகவே நிற்பேன் - இன்குலாப்
சாமுல் ஹமீது என்ப் பெற்றோர்களால் பெயரிடப்பட்டு மக்கள் கவிஞர் என்று தமிழ் பேசும் தேசங்கள் எல்லாம் அறியப் படுபவர் - இன்குலாப்.
மாணாவாரிச் சீமையான இராமநாதபுரம் - கீழக்கரையில் பிறந்தவர். ஒடிக்கப்பட்ட சமூகச் சூழலில் வாழ்ந்த சித்த மருத்தவக் குடும்பம் இவருடையது. மரபுவழி மருத்துவம் போலவே மரபுவழி இசை ஞானம் மிக்கக் குடும்பமும்கூட. புதுக்கல்லூரியில் 35 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சமூகக் கொடுமைகளுக்கு எதிரான எழுத்துப்போரைத் தொடர்ந்து செய்து வருபவர். "ஆளூம் வர்க்கங்கள் நடுநடுங்க ஆயுதப் புரட்சி செய்வோம்" என்பது இன்குலாப் கவிதை வரிகளில் ஒன்று. ஆறு கட்டுரைத் தொகுப்புகள், ஆறு கவிதை தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியராகவும் இவர் பரிணமித்துள்ளார்.
திராவிட இயக்கச் சிந்தனையாளராக, மார்க்சிய ஈடுபாடுடைய இடதுசாரிச் சிந்தனையாளராக, தேசிய இன விடுதலைப் போராட்ட ஆதரவாளராக, ஒடுக்கப்பட்ட தலித்துகளுக்குக் குரல் கொடுப்பவராக பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் இன்குலாப் அவர்கள் வல்லினத்திற்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி . . .
தி.மு.க. அனுதாபியாக இருந்த நீங்கள் 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு "ஆளும் வர்க்கங்கள் நடு நடுங்க ஆயுதப் புரட்சி செய்வோம்" என்று எழுதுகிற அளவிற்கு தி.மு.க.வில் இருந்து விலகி, இடதுசாரி இயக்கங்களுக்குச் செல்ல வேண்டிய காரணம், பின்னணி என்ன?1968 டிசம்பரில் நடந்த 'வெண்மணி படுகொலை' என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதில் ஒன்று. அது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அது பெரியார் சொன்ன கோட்பாட்டுக்கு எதிரான கேள்விகள் கிடையாது. பெரியார் சொன்னதை அண்ணா சொன்னார் என்று நம்பினேன்; அவ்வளவுதான். திராவிடக் கட்சிகளில் ஆட்சிக்கு வந்த கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டது என்று நான் நினைத்தேன். அவர்களின் போரட்டத்தை, நியாயத்தை அது முழுமையாகப் பார்க்கவில்லை என்று நினைத்தேன். அனைத்திற்கும் மேலாக, ஆட்சியா அல்லது ஒடுக்கப்பட்டோரின் விடுதலையா என்று பார்க்கும் போது, ஆட்சியதிகாரத்திற்குதான் அந்தக் கட்சிகள் முதன்மைக் கொடுத்ததே தவிர ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக இல்லை என்பதைத்தான் அந்த நிகழ்ச்சி எனக்குத் தெளிவுபடுத்தியது. . . . . . . . . . .
நக்சல்பாரி இயக்கங்கள் நீர்த்துபோனதால் தமிழ்த் தேசியத்தின்பால் ஈடுபாடு உண்டாகி இருக்கிறாது என்று எடுத்துக்கொள்ளலாமா? நக்சல்பாரி இயக்கங்கள் நீர்த்துப் போனதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால், நக்சல்பாரி இயக்கம் தீவிரம் கொண்ட காலகட்டத்தில் நான் அதில் இருந்திருக்கிறேன். அப்போதும் தமிழ் தேசியத்தின் விடுதலை என்பதற்கு மாறான கொள்கையை நான் வைத்திருந்ததில்லை. நான் சார்ந்திருந்த லிபரேஷன், எம்.எல். இயக்கம் இன்றைக்கும் சில இடங்களில் வலுவாகத்தான் இருக்கிறது. அது ஒரு கட்டத்தில் காஷ்மீர் விடுதலைப் பற்றிச் சொல்லும் போது "அது இந்தியாவிற்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும்" என்கிற நிலைபாட்டை எடுத்தது. நான் அதை எதிர்த்தேன். ஏனென்றால், காஷ்மீர் பற்றி முடிவு செய்ய வேண்டியது எம்.எல்.பார்ட்டியல்ல. காஷ்மீர் பற்றி முடிவு செய்ய வேண்டியது இந்திய அரசாங்கமும் அல்ல, பாகிஸ்தான் அரசாங்கமும் அல்ல. காஷ்மீர் பற்றி காஷ்மீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களிடம் போய் தங்களுடைய முடிவைத் திணிப்பது என்பது எந்த வகையில் சரி? இதுதாந் என்னுடைய கேள்வி . . . . . . . . . . . . . . .
(மேலும் வாசிக்க காண்க வல்லினம்-3, நவம்பர்-ஜனவரி 2003)
- - - - - - - oo0oo - - - - - -
நான் இந்து இல்லை- பிரபஞ்சன்
எனக்கு இந்து மதம் பற்றி தெளிவான புரிதலும் அறிவும் உண்டு. வேத உபநிஷதம் முதலாக அம்மதத்தின் ஆதார தூண்கள் அனைத்தையும் நான் அறிவேன். ஜெயேந்திர சரஸ்வதி, ராம கோபாலன் போன்ற இந்து மதப் புணருத்தாரணர்களைவிடவும், எனக்கு அதிகமான இந்து மத அறிவு உண்டு. இந்து மதம், விசித்திரமான மதம். பல சிந்தனைப் போக்குகளை ஒன்றிணைக்க முயன்று, அதனாலேயே பல முரண்களை, தனக்குள்ளேயே கொண்ட அபத்தமான மதம் அது. அத்தோடு, பௌத்தர், சமணர், சார்வாகர் போன்ற இந்து மதத்துக்கு வெளியே நின்ற ஏன், பௌதிகவாதிகள் உட்பட பல சிந்தனையாளர்களின் தத்துவக் கூறுகளைத் தமக்குள் இணைத்துக் கொண்ட வேடிக்கை மதம் அது. எல்லாவற்றுக்கும் மேலாக, தன் மத வரம்புக்குள் வந்து திரண்ட மக்கள் திரளையும்கூடச் சம்மம் என்று ஒப்புக்கொள்ளாத மனித விரோத மதம் அது. மக்களை வருணங்களாகப் பிரித்து, மானுட மேன்மைக்கேக் குந்தகம் விளைவித்த மதம் அது. இந்த மதத்தை விட்டு, சொரணையும் அறிவுத் தெளிவும் கூடிய மக்கள் வெளியேறும்போது, அதை ஏதோ ஒருவகையில் தடை செய்வது என்ன மனித அறம்?
(மேலும் வாசிக்க காண்க வல்லினம்-3, நவம்பர்-ஜனவரி 2003)
- - - - - - - oo0oo - - - - - -
வாக்குமூலம்- பாஞ்சாலி அம்மள்
அஞ்சாவதா பையன் பிறந்தா. . . சொத்து பஞ்சா பறந்திடும் . . . அவனைக் கடலிலே தூக்கிப் போடு . . . அப்படின்னாரு அவனோட அப்பா. எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
இன்னைக்கு அவன் இந்த ஜனங்களுக்கு சொத்தாயிட்டான். அதை நெனைக்கற்ப்போ. . . நான் வேண்டிய தெய்வமெல்லாம் என்னோடு இருக்கிறாதுதான் நெசம். . .
பாசம் பொங்க சொல்லி ஆனந்தப்பட்டார் 89 வயது நிரம்பிய அந்த தாய் பாஞ்சாலியம்மாள்.
இவரைச் சந்திக்க புதுவையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திலாசுப்பேட்டையை அடைந்தோம்.
சின்னஞ்சிறிய சந்து . . . அதனுள் சில அடி தூரம் நடந்ததும். அவர் வீடு வந்துவிடுகிறது. முன்புறம் திண்ணை கொண்ட மாடி வீடு. படி ஏறி உள்ளே நுழைந்தால் பரந்த பெரிய ஹால். அதில் நான்கைந்து மூங்கில் சேர். . . ஒரு பெஞ்ச். . . அதன் மேல் ஒரு டெலிபோன். ஒரு ஓரத்தில் பிளாக் அன்ட் ஒயிட் போர்ட்டபிள் டிவி.
ஹாலையட்டி 2 அறைகள் மர்றும் சமையல் கட்டு. ஒரு இடத்தில் தண்ணீர் குடம், சில சில்வர் பாத்திரங்கள்.
முன் அறையில் இருந்து மாடிக்குப் படி செல்கிறது. மாடிதான் ரங்கசாமியின் படுக்கை அறை. அங்கு ஒரு மடக்கு பிளாஸ்டிக் கட்டில் (அதில் பெட்ஷீட்கூட கிடையாது) அதன்மேல் நான்கைந்து செட் கதர் வேட்டி-சட்டை. அவரைப் போலவே அவரது வீடும் எளிமையாகக் காட்சி அளிக்கிறது. பிரம்மச்சாரியான ரங்கசாமி தனது தாயாருடன் சில வருடமாக இந்த வீட்டில்தான் வசித்து வருகிறார். வீட்டில் நுழைந்து இவரது படுக்கை அறைவரை யார் வேண்டுமானாலும் போகலாம். எந்தத் தடையும் இல்லை.
கண்ணில் பட்டது கொல்லைப்புறத் தோட்டம். அங்குதான் உட்கார்ந்திருந்தார் பாஞ்சாலியம்மாள்.
எங்களை அரிமுகப்படுத்தியதும், "பேப்பர்காரங்காளா . . . நான் என்ன சொல்லறது.. . . மந்திரிக்கு தெரிஞ்சா ஏதாவது சொல்வார்"
உடல் கூன் விழுந்த நிலையில் மெல்ல மெல்ல ஹாலுக்குள் வந்து பிரம்பு நாற்காளியில் அமர்ந்தார். மகனால் கிடைத்த மரியாதை அவரை நிமிர வைத்தது. தனது நினைவில் நின்றதை எங்களிடம் பகிர்ந்தார்.
"எனக்கு அஞ்சு புள்ளைங்க. . . மூத்தவன் ஆதிகேசவன், வாத்தியாரு. அடுத்து தலிஞ்சம்மா, அலமேலு, மனோன்மணின்னு மூணு பொண்ணுங்க. ஐந்தாவதுதான் மந்திரி பிறந்தான்.
ஐந்தாவது ஆண் குழந்தை பிறந்தா சொத்து பஞ்சாப் பறந்திடும்னு அப்ப சொல்வாங்க. அதனால என் வீட்டுக்காரர் குழந்தை முகத்தைக் கூட பார்க்காம அவனை கடல்ல போட்டுட்டு வந்திடுன்னுட்டார். அப்போ என் மனசு கிடந்து துடிச்சது. அதுக்கெல்லாம் சேர்த்து இப்ப அவன் பெரிய ஆளா ஆயிட்டான். அத நினைக்கிறப்போ பெருமையா இருக்கு.
சின்ன வயசுல இருந்தே படிப்பிலே கவனமா இருப்பான். அக்கம் பக்கம் போய் நிக்கனும்னு நினைக்க மாட்டான். கோலிகுண்டு கூட விளையாடத் தெரியாது. படிக்கிற காலத்துல அவனுக்கு படிப்பத் தவிர எதுவும் தெரியாது.
வக்கீலுக்கு படிச்சிட்டு ஒரே ஒரு கேசுக்குத்தான் போனான். பொய் பேசுற வேலை வேண்டான்னு சொல்லிட்டு அத விட்டுட்டான்.
ரெட்டியார்பாளையத்துல கொஞ்சம் நிலக் கிடக்குது. பன மரங்கள கள்ளு மரத்துக்கு விட்டு அந்த வருமானத்துல தான் படிக்க வச்சோம். அந்தப் பணத்தைக்கூட எங்க வீட்டுக்காரரு போயி வாங்க மாட்டாரு. இவர் கள்ளு குடிக்க போயிட்டார்னு யாராவது சொல்லிடுவாங்கன்னு பேஅம். அந்த பணத்தைக் கூட கடைக்காரங்க வீட்டுல வந்துதான் கொடுப்பாங்க.
எம் புள்ள மந்திரியும் அவங்க அப்பா மாதிரி. எந்த கெட்ட பழக்கங்களும் இல்ல. படிச்சு முடிச்சுட்டு பெருமாளுடன் அரசியலில் இருந்தான். அப்புறம், அவரை விட்டு பிரிஞ்சு தனியா தேர்தல்லே நின்னான்.
முதல் தடவை ஜெயிச்சதுமே மந்திரி ஆயிட்டான். அவன் ஜெயிச்ச பிறகுதான்பா இந்தத் தொகுதியே நல்லா இருக்கு. அதுவரைக்கும் மழை பொஞ்சா முழங்கால் வரைக்கும் தண்ணி நிற்கும்.
அவந் கல்யாணம் செய்துக்காம இருந்ததுதான் என்னை வேதனைப் படுத்தியது. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். பெரியவங்களை வச்சி சொன்னேன். பிரயோஜனப் படலை. சரின்னு விட்டுவிட்டேன். போகப்போக மனசு சரியாயிட்டு.
இப்போ முதல் மந்திரியா பதவி ஏற்கிறத பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அதுக்கு கொடுப்பினை இல்லாம போயிட்டு. என் நேரம் அன்னைக்கு பார்த்து வழுக்கி விழுந்து காலில் அடிபட்டு விட்டது. அதனால வரமுடியாம போயிட்டு. எல்லா ஜெனமும் பார்த்தது. என்னால பார்க்க முடியல. இப்போகூட அதத்தான் சொல்லிட்டு இருந்தேன். ராத்திரி தூங்கப்போகும்போது கூட இந்த நெனப்புதான். வயசாயிடுச்சு, இனிமே அந்த வாய்ப்பு கிடைக்குமா. . . . ?
(பாஞ்சாலியம்மாள், புதுவை முதல்வர் திரு.ந. ரங்கசாமி அவர்களின் தாயார்)
- - - - - - - oo0oo - - - - - -
வல்லினம் மூன்றாவது இதழில் . . . . .கட்டுரை:தமிழ்ச் சினிமாவும் அதன் பார்வையாளர்களும் - அ. ராமசாமி
பாடநூல் அரசியல் - முனைவர் த. பரசுராமன்
உலகமயமும் தொலைக்காட்சியும் : கலாச்சாரத் தூய்மை வாதத்தின் போதாமை - அ.மார்க்ஸ்
ஊருக்குத் திரும்புதல் - சு. வில்வரத்தினம்
பதிவு : இருளும் வாழ்க்கை
கவிதை : ப. சிவக்குமார், மு. முருகேஷ், மு. சத்யா, பாரி, அன்பாதவன்
சிறுகதை: மயில்வேலன்